ஆன்மீகசபை நிர்வாக உறுப்பினர் தேர்தல் 2021
எமது அன்புக்குரிய உறவுகளே !
ஒஸ்லோ – வீக்கன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை நிர்வாக உறுப்பினர் நால்வரை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 18ம் திகதி முதல் 25ம் திகதி வரையில், முதற் தடவையாக இணையவழித் தேர்தலாக நடாத்தப்படவுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
இதுவரையில் தேர்தலை நடாத்துவதற்கான பணிகள் சுமூகமாகவும், நிதானமாகவும், ஆன்மீக வழிகாட்டியின் ஆலோசனையுடனும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நீங்கள் அனுப்பிவைத்த விருப்பு வேட்பாளர்களுடனான முதற்கட்ட சந்திப்புக்கள் தொலைபேசிவழி மேற்கொள்ளப்பட்டு அவர்களின் உளவிருப்புக்கள் பெறப்பட்டு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வேட்பாளர்களுடன் இணையத்தின் மூலம் தனியான நேர்காணலை மேற்கொண்டு, இறைவனுக்கும் எம் சமூகத்திற்கும் சேவை செய்யத் தகுதிபடைத்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து யாப்பு விதிகளுக்கிசைவாக மார்ச் மாதம் 18ம் திகதிக்கு முன்பாக வேட்பாளர் அனைவரையும் உங்கள் பார்வைக்குக் கிடைக்கும் வகையில் ஒழுங்குகள் செய்யப்படும் என்பதை அறியத்தருகிறோம்.
தேர்தல் தொடர்பான நடைமுறைத் தகவல்களை புரிதலோடு அறிந்துகொள்ள கீழ்க்காணும் தகவல்களை கேள்வி / பதில் வடிவத்தில் முன்வைக்கிறோம்.
கேள்வி: யார் இந்தத் தேர்தலில் வாக்களிக்கலாம்?
பதில் : உறுதிப்பூசுதல் என்னும் தேவதிரவிய அனுமானத்தைப் பெற்ற 16 வயதும் அதற்கும் மேற்பட்டவரும், கடந்த 2020 ல் ஒஸ்லோ – வீக்கன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபைக்கான நிதிப்பங்களிப்பு செலுத்திய உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதியுடைவர்கள்.
கேள்வி : வாக்களிக்க முன்பு நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
பதில் : தேர்தலானது முதற்தடவையாக இணையவழியில் நடாத்தப்படுவதால் வாக்களர்களின் மின்னஞ்சல் முகவரி உட்பட தனிவிபரங்கள், அதாவது பெயர், பிறப்பு விபரம், கைத்தொலைபேசி என்பனவற்றை தேர்தல் குழுவிற்கு தெரியப்படுத்துதல் வேண்டும். தேர்தலை நடாத்த இத்தகவல்கள் இன்றியமையாதது. (கணிசமானோர் இதுவரையில் பதிவுகளைச் செய்துள்ளனர்) பதிவுகளை இலகுவாக்க எம்மால் படிவம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. https://forms.gle/qaMizScz9FhcvfmdA
இந்த இணைப்பை அழுத்தி உங்கள் விபரங்களைப் பதிவு செய்யவும்.
கேள்வி : எதற்காக உங்கள் விபரங்கள் எமக்குத் தேவைப்படுகிறது?
பதில் : வாக்களர்கள் பட்டியல் தயாரிக்க மேற்படி பதிவுகள் அவசியமானது. அத்தோடு வாக்களிக்கத் தகுதியுள்ளோர் பட்டியல் ஆன்மீகசபை நிர்வாகத்தால் (பொருளாளர்) எமக்கு அனுப்பிவைக்கும் போது அதை ஒப்பீடு செய்து, சரிபார்த்துத் தவறுகள் இடம்பெறாது முற்றாகத் தடுக்க உங்கள் விபரங்கள் மிகவும் அவசியமானது. எனவே உங்கள் பதிவுகளை இறுதிக்கணம் வரை காத்திருக்காது விரைவாகச் செய்யுமாறு அன்போடு வேண்டுகிறோம்.
கேள்வி : தேர்தல் குழுவினரின் பணி என்ன?
பதில் : ஆன்மீக வழிகாட்டியின் ஆலோசனையைப் பெற்று தேர்தலை நடாத்துவது. அனைவருக்குமான தகவல்களை உடனுக்குடன் வழங்குவது. வேட்பாளர்களுடன் சந்திப்பை மேற்கொண்டு, அவர்களின் முழுமையான உளவிருப்பை அறிந்து அவர்களை தேர்தலில் பங்குபெற ஊக்குவிப்பது. வாக்காளர்களின் பதிவுகளை உறுதி செய்து, வாக்களிக்கத் தகுதிபடைத்த அனைவருக்கும் இணையத்தில் வாக்களிக்க வழிசமைத்தல். நேர்மையாக முழுமையான இரகசியப் பாதுகாப்போடு தேர்தலை யாப்பு விதிகளுக்கு அமைவாக நடாத்துவது. தேர்தல் தொடர்பான தேவையான தகவல்களை ஆன்மீக வழிகாட்டிக்குத் தெரியப்படுத்துதல் போன்றன தேர்தல் குழுவினரின் முதன்மையான பணியாகும்.
கேள்வி: எவ்வாறு வாக்களிப்பது?
பதில் : வாக்களிப்பு வாரத்திற்கு முன்பாக ஒவ்வொரு வாக்காளருக்கும் தனியான இணைப்புக்கள் (link) அனுப்பப்படும். அவ் இணைப்பை அழுத்தி நீங்கள் விரும்பிய நான்கு வேட்பாளரைத் தெரிவு செய்யலாம்.
அன்பான உறவுகளே,
மேற்கூறிய தகவல்கள் சற்று கனதியாக இருந்தாலும் அவற்றை சற்று ஆழமாகப் படித்து, ஆன்மீகசபை நிர்வாக உறுப்பினர் தேர்தலை திறம்பட நடாத்திட தேர்தல் குழுவினராகிய எமக்கு ஒத்தாசை தருமாறு மிகவும் பணிவோடு வேண்டுகிறோம். தேர்தல் பணிகள் அனைத்தும் தேர்தல் குழுவினராகிய எம்மால் தன்னிச்சையாக நடாத்தப்பட்டாலும், ஆன்மீக வழிகாட்டியின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்பவே எமது செயற்பாடுகள் அமைந்துள்ளது என்பதைக் கோடிட்டுக்காட்ட விரும்புகிறோம்.
நன்றி.
தேர்தல் குழு – 2021
திரேசம்மா (மரியா)
யூட்
நிரஞ்சன்