FEATUREDஅறிவித்தல்

குருத்துவ வாழ்வில் 25ம் ஆண்டு வெள்ளிவிழா வாழ்த்து அருட்பணி டேவிட் இம்மானுவேல் ரட்ணராஜ், அமதி

குருத்துவ வாழ்வில் வெள்ளிவிழா காணும்
அருட்பணி டேவிட் இம்மானுவேல் ரட்ணராஜ், அமதி
அடிகளாரை வாழ்த்துவதில் ஒஸ்லோ வீக்கன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஒஸ்லோ- வீக்கன் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது.

மேய்ப்பனில்லா ஆடுகளாய் நாம் இருந்த ஆண்டுகள் இரண்டிற்குப்பின்னர் எமக்கு கிடைத்த நல்லாயன் நீரே. அன்றிலிருந்து நற்பணி செய்துவரும் உங்களை வாழ்த்துவதில் நோர்வே ஒஸ்லோ கத்தோலிக்க மக்களாகிய நாம் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறோம்.

நோர்வே மண்ணில் உமக்கு வெள்ளிவிழா! இது இறைவனின் திட்டம்.
பனிபடர்ந்த துருவ நாட்டின் காலநிலை, அந்நிய மொழி, புதிய சூழல் என்பன ஆரம்பத்தில் உமக்கு இடையூறாக இருந்தாலும் ‘அழைத்தவன் பார்த்துக்கொள்வான்’ எனும் மனத்துணிவுடன் பணியக மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு தளர்ச்சியின்றி ஆர்வத்துடன் உழைக்கின்றீர். உமது சிந்தனையில், பணிவாழ்வில் நல்லது என்று நீர் கற்றுக்கொண்டதை எம் பணியகத்தில் துரிதமாக செயற்படுத்தி, குறுகிய காலத்தில் பல மாற்றங்களைச் செய்து, ஒவ்வொரு விடயத்தையும் திட்டமிட்டு நேர்த்தியாக நடத்தும் உங்களுக்கு எமது பாராட்டுக்கள், கோபப்பட்டாலும் அதனை உடனே மறந்தவராய் நற்பணிகள் பல செய்து வருகின்றீர்.
“மனிதனுக்கு உகந்தவனாய் இருந்தால் கிறிஸ்துவுக்கு பணியாளனாய் இருக்க முடியாது” என்று புனித பவுல் கூறுவதுபோல மனிதர்களது தனிப்பட்ட சொந்த விருப்பங்கள்,விளக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடவுளை மகிமைப்படுத்துவதே உமது நோக்கமாக இருக்கிறது.

வெள்ளிவிழா நாயகன் புரிந்த, புரிகின்ற இறைபணிகள் பல இங்கே. கம்பீரக் குரலில் மறையுரை மன்னராய், ஆன்மீகக் குருவாய், ஆலோசகராய் இறைவழியில் எங்களை வழிநடத்தி, ‘ஞாயிறு திருப்பலி’ முக்கியம் என்பதை வலியுறுத்தி, வழிபாட்டில் நேரத்தோடு, ஆர்வத்தோடு கலந்துகொள்ள வைப்பதுடன், கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமான நற்கருணை வழிபாட்டை நடாத்தி, வாழ்வில் பல நன்மைகளை பெற உதவுகிறீர். ஏற்கனவே பணியாற்றுகின்ற பணிக்குழுக்களோடு மாசில்லா குழந்தைகள் மன்றம், அன்னை மரியா செபமாலை பக்திக்குழுவையும் உருவாக்கி, அனைவரையும், இறைவழிபாட்டில் கலந்துகொள்ளச் செய்கின்றீர். கறைபடிந்த உள்ளதை கழுவிப்போக்கிட தவக்கால யாத்திரைகளை ஏற்பாடு செய்து, நேர்த்தியாக அவற்றை நடாத்தி முடித்ததோடு வணக்கமாதா மாதத்தில் மரியாளின் அருள் குடும்பங்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்து வருகின்றீர். வெறும் கேட்பவர்களாக மட்டுமல்ல இறைவார்த்தையை வாழ்வில் வாழ, ஒவ்வொருவரின் மனக்கதவைத் திறந்து,பாவஅறிக்கை செய்து, கடவுளுக்கு ஏற்ற பிள்ளைகளாக நாம் மாறவேண்டுமென்று விரும்புகிறீர். இளையோரிடம் இறைவிசுவாசம் வளர வேண்டுமென்று மன்றாடுகின்றீர்.

காலத்தின் தேவைகருதி தொலைநோக்குப் பார்வையுடன் சமூக ஊடகங்களின் வழி பணியகத்தின் இறைபணியை உலகெங்கிலும் பரப்பவேண்டுமென்று தீர்மானித்து கத்தோலிக்க ஆன்மீக ஊடக குழுவொன்றை உருவாக்கி செயல்வடிவம் கொடுத்தீர். அதன் முதல் வெளியீடாக 31 பங்குனி 2024 உயிர்த்த ஞாயிறு அன்று அறிமுகவிழா நடந்தேறி பலரின் பாராட்டுக்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அவசரமான உலகத்தில் வேலைப்பழு, சமூக அழுத்தம், பல்கலாசார சூழல், உடல் உள பிரச்சினைகளுடன் புலம்பெயர்ந்து வாழும் எமக்கு அருட்பணியாளரின் வழிபாடுகள், வழிகாட்டல்கள் ஆண்டவரிடம் எம்மை தஞÊசமடைய வைக்கின்றன.

பணியகத்தின் துரித வளர்ச்சிக்கு ஊன்று கோலாக நின்று உழைக்கும் அருட்பணி டேவிட் இம்மானுவேல் ரட்ணராஜ், அமதி அடிகளாரை எமக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்வதோடு, இங்குமட்டுமல்ல செல்லுமிடமெல்லாம் உங்கள் பணிவாழ்வு சிறந்து விளங்கிட, உடல் உள, ஆன்ம நலனை இறைவன் நிறைவாக அருள வேண்டுமென்று ஆசித்து, மீண்டும் குருத்துவ வாழ்வில் 25ம் ஆண்டு வெள்ளிவிழா வாழ்த்துகளை கூறி நிற்கும்

தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம். ஒஸ்லோ- வீக்கன் (Oslo-Viken)

29.05.2024
Norway

« av 3 »