அறிவித்தல்

இணையவழித் தேர்தல்

எமது அன்பான உறவுகளுக்கு எமது பணிவான வணக்கங்கள் !
அன்புடையீர்,எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ம் திகதி முதல் 25ம் திகதி வரையான காலப்பகுதியில் ஒஸ்லோ – வீக்கன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீக நிருவாகசபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இணையத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் சார்ந்த நடைமுறைத் தகவல்களை தேர்தல் குழுவினராகிய நாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
முதற்தடவையாக இணையத்தில் இத்தேர்தலை நாம் நடாத்தவுள்ளதால் சில சவால்களை நாம் எதிர்நோக்கியுள்ளோம். ஆயினும் இச்சவால்களை உங்கள் துணையுடன் எம்மால் எதிர்கொள்ள முடியும் என ஆழமாக நம்புகிறோம்.
பெரும்பாலான ஆன்மீகசபை உறுப்பினர்களது தனிநபர் விபரங்கள் நிருவாகத்தினரிடம் இருந்தாலும், அவற்றை மீளுறுதி செய்வதால் மட்டுமே எம்மால் இத்தேர்தலை நேர்த்தியாக நடாத்த முடியும். குறிப்பாக மின்னஞ்சல் முகவரிகள் சரிபார்க்கப்பட்டு வாக்களிப்பதற்கான இணைப்புக்களை அனுப்ப முடியும். மேலும் 16 வயதும் அதற்கு மேற்பட்டவரும் வாக்களிக்கவுள்ளதால் அனைவரின் பிறப்பு விபரங்களும் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே கீழே உள்ள இணைப்பை அழுத்தி அப்படிவத்தில் உங்கள் விபரங்களைப் பதிவு செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறோம். இது தேர்தலை நடாத்துவதற்கு மிகவும் முக்கியமானதாகும். அதில் முதன்மையானது உங்கள் மின்னஞ்சல் முகவரியாகும்.
ஒரு தேர்தலுக்கு வாக்காளர்கள் எவ்வளவு அவசியமோ அவ்வாறே வேட்பாளர்களும் அவசியமாகும். எமது பங்கில் இறைவிசுவாசத்துடன் நேர்மையாகப் பணிபுரியும் பலர் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தேர்தலில் நிற்பதில்லை. எனவே எமது ஆன்மீகசபையை இறைநம்பிக்கையுடனும், திறமையுடனும் நிருவகிக்கத் தகுதி படைத்த ஒருவரை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரை தேர்தல் குழுவினராகிய எமக்குப் பரிந்துரைத்தால், நாம் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் விருபங்களைக் கேட்டறிந்து வேட்பாளராகத் தேர்தலில் களமிறக்க முடியும். எனவே நீங்கள் ஆற்றலுள்ள வேட்பாளர்களின் பெயர், தொலைபேசி போன்ற விபரங்களைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறோம். உங்கள் நல்லாதரவுடன் மட்டுமே இத்தேர்தலை எம்மால் நடாத்த முடியும் என்பதை மீண்டும் பதிவு செய்கிறோம்.
எம்முடனான தொடர்புகள்  தமிழ், நோர்வீஜிய, ஆங்கில மொழிகளில் இருக்கலாம் என்பதோடு தேர்தல் செயற்பாடுகள் தொடர்பான மேலதிக விபரங்களை தேவையான தருணத்தில் வழங்குவோம்.
மேலும் இத்தேர்தலானது ஆன்மீக வழிகாட்டியின் நேரடி நெறிப்படுத்தலில் நடாத்தப்பட்டாலும், தேர்தல் குழுவினர் தன்னிச்சையாக செயற்படும் விதமாக அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகிறோம்.
உங்கள் மின்னஞ்சல், பெயர், பிறப்பு விபரம், கைத்தொலைபேசி எண் என்பவற்றை நிரப்பி அனுப்ப இவ் இணைப்பை அழுத்தவும்:  

https://forms.gle/qaMizScz9FhcvfmdA

எமது மின்னஞ்சல் முகவரி : valg@nortamilkat.no
நன்றி –

தகவல்தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபைத் தேர்தல் குழுவினர் – 2021
திரேசம்மா லடிஸ்லோஸ், யூட் இமானுவல்பிள்ளை, குணசிங்கம் நிரஞ்சன்