அறிவித்தல்

எமது அன்பான பங்கு மக்களே.

புனித யோகானஸ் ஆலயத்தின் பங்குத்தந்தை மதிப்பிற்குரிய அடிகளார் Tan அவர்கள் தமிழ்க் கத்தோலிக்க மக்கள் புனித அந்தோனியார் மீது கொண்டுள்ள அளவற்ற பக்தியை கரிசனையுடன் கண்ணுற்றதால், புனித அந்தோனியாரின் திருப்பண்டத்தை இத்தாலியின் பதுவை நகரில் இருந்து சிறப்பாக எடுத்து வந்து புனித யோகானஸ் ஆலயத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள புனித அந்தோனியாரின் திருவுருவச் சிலையோடு நிரந்தரமாக இருக்கும்படி செய்துள்ளார். இச்செயற்பாடானது நோர்வே வாழ் தமிழ்க் கிறிஸ்தவ மக்களின் வரலாற்றில் என்றும் நன்றியோடு நினைவு கூரப்படும் என்பதில் ஐயமில்லை.

அண்ணளவாக 800 வருடங்களுக்கு முன்பே இறையேசுவின் வரத்தைப் பெற்று புனித நற்செய்தியை உலகெங்கும் பரவச் செய்த ஓர் அற்புதரே புனித அந்தோனியார் ஆவர். இவர் 1231–ம் ஆண்டு ஜூன் 13–ந் தேதி இப்பூவுலகை விட்டு மறைந்தார். 32 ஆண்டுகளுக்கு பிறகு அவரது கல்லறையை திறந்து பார்த்தபோது, உயிர் துடிப்புள்ள அவரது நாவும், சிதையாத எலும்புகளும், அழுகாமல் உறுதியுடன் காணப்பட்ட சில உடல் உறுப்புகளும் அழியாமல் கிடைத்தன. இது மிகவும் பெரிய அதிசயமாக கருதப்படுகிறது. இவைகள் புனித பண்டங்கள் என்று திருஅவையால் அழைக்கப்படுகின்றன. அத் திருப்பண்டங்களின் ஒரு சிறிய பகுதியே இப்போது எமது யோகானஸ் ஆலையத்தில் பதிக்கப்பட்டுள்ளது எமக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.

எமது அன்பான உறவுகளே, புனித அந்தோனியாரின் திருப்பண்டத்தை தரிசித்து வணங்கிட எமக்கான காலம் விரைவாகக் கிடைக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். எதிர்வரும் 26ம் திகதி முதல் யோகானஸ் ஆலயம் திறக்கப்படவுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் தற்போதுள்ள சூழலில் 20 பக்தர்கள் மட்டும் முன்கூட்டிய பதிவுகளைச் செய்து ஆலயத்திற்கு செல்ல முடியும் என்ற தகவலையும் இத்தோடு பகிர்ந்து கொள்கிறோம்.

நீண்டதோர் காலப்பகுதியின் பின்னர் எமக்கான ஆன்மீகச் செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறவுள்ளதையிட்டு மகிழ்ச்சியடையும் அதேவேளை, தொடரும் கொரோனாவின் நோய்த் தொற்று நீங்கி நாமெல்லாம் சகவாழ்வுக்குத் திரும்ப எல்லாம் வல்ல இறைவன் துணை செய்ய வேண்டும் என எமது செபங்களில் இடைவிடாது வேண்டுவோம்.

*நன்றி –

தமிழ்க் கத்தோலிக்க
ஆன்மீகசபை
ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம்
© 2021*